தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு தொடக்கம்! - வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு!

வேலூர்: பணப்பட்டுவாடா புகாரினால் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கியது.

வாக்குப்பதிவு

By

Published : Aug 5, 2019, 7:01 AM IST

Updated : Aug 5, 2019, 7:14 AM IST

பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு, மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அந்தத் தேர்தலில் தேனி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது.

இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த அதே வேட்பாளர்களே மீண்டும் களமிறங்கினர். அதன்படி, வேலூர் தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின்றனர். இதன் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவேளையின்றி நடைபெற இருக்கிறது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு தொடக்கம்

வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர் ஆவர். வாக்களிப்பதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு எந்திரங்களும் ராணிபேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும். பின்னர், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, ஆகஸ்ட் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Last Updated : Aug 5, 2019, 7:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details