வேலூர்:முதலமைச்சர் கோப்பை 2023 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதும் சுமார் 23,000 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சுமார் 3,000 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கடந்த ஜூன் 28ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர்.
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 1ஆம் தேதி அன்று தொடங்கி வருகிற 25ஆம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வேலூர் மாவட்டத்தில் இருந்து 778 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களில் முதற்கட்டமாக 68 வீரர், வீராங்கனைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், கடந்த ஜூன் 29 அன்று வாழ்த்தி கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.