கரோனா ஊரடங்கினால் மக்கள் அத்தியாவசிய தேவைக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டுவருகின்றனர். இது ஒருபுறமிருக்க கரோனா, இதர பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இறப்புச் சான்றிதழைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.
இறப்புச் சான்றிதழைப் பதிவுசெய்து வாங்குவதற்கான இ-சேவை மையங்களும் இயங்கவில்லை. அப்படியே இயங்கினாலும் எப்படிப் பதிவுசெய்வது என்பது போன்ற வினாக்களுக்கு இறந்தவர்களின் உறவினர்களுக்கு விடை தெரியவில்லை.
இத்தகைய இடர்ப்பாடுகளைக் கருத்தில்கொண்ட வேலூர் மாவட்ட நிர்வாகம் இறந்தவர்களுக்கான வாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழை நேரடியாக அவர்களது குடும்பத்தினரின் வீட்டிற்கே சென்று வழங்கிவருகிறது.
இதன் ஒரு பகுதியாக வேலூர் தொரப்பாடியில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் கடந்த மே 16 அன்று கரோனா பாதிப்பால் அரசு ஊழியர் பெரியசாமி (56) உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் உரியவரிடம் வழங்கினார்.
இது குறித்து வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் கூறியதாவது, "வேலூர் மாவட்டத்தில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மூன்றாயிரத்து 358 பேர் கரோனா, இதர பாதிப்புகளால் உயிரிழந்தனர்.
ஊரடங்கு சமயத்தில் இறந்தவர்களுக்கான இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெறுவது இயலாத ஒன்றாக உள்ளது. இந்தச் சூழலில்தான் வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் அறிவுரைப்படி இந்தத் திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் பிரத்யேகமாகத் தொடங்கியுள்ளோம்.