வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அரசு அனுமதியுடன் கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த நபர், சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கு தாமதமாகத் தெரிவித்ததால், சி.எம்.சி மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று பேரும், பெங்களூரைச் சேர்ந்த ஒருவரும் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கரோனா சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்த தகவலை உடனுக்குடன் வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சி.எம்.சி மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டதன் பேரில், ஆற்காடு சாலையின் குறுக்கே தடுப்பு அமைக்கப்பட்டு காவலர்கள், வருவாய் மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.