சென்னை:வேலூர்கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி, இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.சி(CMC) மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று (நவம் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.எம்.சி. மருத்துவ கல்லூரி தரப்பில், ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், கல்லூரி விடுதி மற்றும் நூலகங்களில் 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ராகிங் சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, விசாரணை துவங்கியுள்ளதாகவும், முதலாமாண்டு மாணவர்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்து கல்லூரி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:"வடகிழக்கு மாநிலங்களில் 2-வது மொழியாக தமிழ்" - ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்