வேலூர்:திறப்புவிழா ஆஃபராக ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்த பிரியாணி கடையில் கூட்டம் குவிந்ததால், கடையை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். கடையில் கூடிய கூட்டத்தைக் கலைத்து போலீசார் கடையை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே காட்பாடி வேலூர் சாலையில் நேற்று புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று தனது கடையின் திறப்பு விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று கடை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நூற்றுக்கணக்கான மக்கள் பிரியாணி வாங்க கடை முன் குவிந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வேலூர் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் குடை பிடித்த படியும், கையால் முகத்தை மறைத்தபடியும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர்.
இதனால் காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது. இந்த சூழலில் அந்த வழியாக சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீரென இறங்கி கடையில் ஆய்வு செய்தார். அப்போது தங்கள் கடையை நம்பி வந்த வாடிக்கையாளர்களுக்கு வெயிலில் அவதி படாதவாறு நிழல் குடைகளோ, இருக்கை, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் வாடிக்கையாளர்களை கடும் அவதிக்கு உள்ளாக்குவதையும் கண்டார்.