வேலூரில் ஹைடெக் வசதிகளுடன் கூடிய அரசு நடுநிலை பள்ளி வேலூர்:சுத்தமான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான விளையாட்டு திடல், ‘ஸ்மார்ட்' வகுப்பறை, பசுமை நிறைந்த மரங்கள், மாணவர்கள் உணவு சாப்பிட தனி இடம் என தனியார் பள்ளிகளுக்கு நிகராக அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது.
அரசுப் பள்ளி என்றாலே அங்கு கல்வித் தரம் இருக்காது, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருக்காது என்ற நிலையை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அடியோடு மாற்றியிருக்கிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மற்றும் தன்னார்வலர்கள் செய்து கொடுத்த வசதிகளால் இந்த பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.
பள்ளியின் வளர்ச்சி குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபிநாத் கூறுகையில், “இப்பள்ளியில் 2013ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டேன். இப்பள்ளியில் நான் பொறுப்பேற்று இருக்கும்போது மாணவர்களின் எண்ணிக்கை 90 பேர். இப்பொழுது 2023ம் ஆண்டு வெற்றிகரமாக 400 மாணவர்களை தாண்டி நடத்தி வருகிறோம்.
800 குடும்பங்கள் வசிக்கக்கூடிய இந்த கிராமத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் ஆரம்ப நிலையில் தனியார் பள்ளிகளை நோக்கி செல்கின்றனர். இந்த கிராமத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளியில் வசதிகள் இல்லாத காரணத்தால் தனியார் பள்ளிக்கு நிகராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதற்கான முதல் ஏற்படாக எங்கள் பள்ளியில் மேக்ஸ் லேபை தொடங்கினோம்.
ஆன்லைன் மூலமாக கணிதத்தை எப்படி கற்றுக் கொள்ளலாம் என மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம். ஒரு ஆரம்ப பள்ளியில் படிக்கக்கூடிய மாணவன் ஸ்மார்ட் போர்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொல்லித் தருகிறோம். கணினியில் ஆரம்ப நிலைப்பாட்டை நாங்கள் கற்றுத் தருகிறோம்.
அரசுப் பள்ளியில் பிளாக் போர்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் மாணவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதால் நாங்கள் அதை எடுத்துவிட்டு ஒயிட் போர்டு அமைத்துள்ளோம் மற்றும் இயற்கை சூழலை கொண்டு வந்துள்ளோம். இந்த வசதியை மாணவர்கள் கொடுப்பதினால் இப்பொழுது எங்களுக்கு வெளி கிராமங்களில் இருந்து 200 மாணவர்கள் எங்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இங்கு பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்களும் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்து வருகின்றனர். 100 நாள் வேலை ஆட்கள் அவர்களது ஒரு வாரம் சம்பளத்தை கணித லேப் ஆரம்பிப்பதற்காக 30 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக கொடுத்திருக்கிறார்கள்.
அரசுப் பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக 80 விழுக்காடுகள் நாங்கள் மாற்றி இருக்கிறோம். கல்வித் துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு தருகின்றனர். எங்களுடைய நோக்கம் அரசு பள்ளி இந்த மாதிரி தான் இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றி தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுடைய எண்ணத்தை மாற்றவேண்டும்.
மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் படிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்று மனநிலையை கொண்டு செல்ல வேண்டும் அதை நோக்கி எங்கள் பயணம் சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு போக்குவரத்து பேருந்து வசதி மட்டும் தமிழக அரசு செய்து கொடுத்தால் மேலும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார்.
மேலும், தலைமை ஆசிரியர் கோபிநாத் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன் சொந்த செலவிலேயே செய்து முடித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் வரை செலவழித்து மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தற்போது சுற்றுச்சுவரை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தமிழக அரசு பள்ளிக்கு தனி போருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதே அப்பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:"அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகள் எப்படி இருக்கும் என தெரியாதா...?" - சீமான்!