சாலை வசதி இல்லாததால் குழந்தையை பறிகொடுத்த மலை கிராமம்!!... தனி ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்ய அரசு உத்தரவு வேலூர்: அணைக்கட்டு வட்டத்தில் மலைப் பகுதியில் உள்ள அல்லேரி ஊராட்சி அத்திமரத்துகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜி - பிரியா தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற மகள் இருந்தார். தனுஷ்காவை கடந்த மே 27ஆம் தேதி பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து மலைப் பகுதியில் முறையான சாலை வசதி மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக அல்லேரி மலைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், அல்லேரி மலை கிராமத்திற்கு சென்று வரும் வகையில் ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அல்லேரி மலைக்கு புதிய ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கூறுகையில், “அல்லேரி மலைவாழ் மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சேவை மூலம் அல்லேரி மலை கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் இதற்கு ஓட்டுநராக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
மலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கீழே அழைத்து வரப்பட்டு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதம் தடுக்கப்படும்” என்றார்.
மேலும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் பீஞ்சமந்தை வந்து, மலை கிராமத்திற்கு சென்று அங்கு போடப்படும் சாலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மலை மேல் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் 54 பயனாளிகளுக்கு 33.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், “அல்லேரி மலைக்கு என தனியாக ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அல்லேரி மலைப்பகுதிக்கு சாலை வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
வனத்துறையிடம் அனுமதி பெற்ற பின் சாலை அமைக்கப்படும். பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு சாலை போடும் பணி 70 சதவீதம் நிறைவடைந்து முடியும் தருவாயில் உள்ளது. இரண்டு மாதங்களுக்குள் முழுவதுமாக சாலை அமைக்கப்படும். சாலை பணிகள் முடிந்த பிறகு வேலூர் மாவட்ட எல்லைக்குள் ஜவ்வாது மலைத் தொடரில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு, சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
இதையும் படிங்க:தலையில் நட்டுடன் தையல் போட்டதால் பரபரப்பு.. அரசு மருத்துவரின் அலட்சியமே என குற்றச்சாட்டு