வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சித்தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் கூறியதை தற்போது பார்க்கலாம்.
நீங்கள் வெற்றி பெற்றால் முன்னுரிமை அளித்து செயல்படுத்தக் கூடிய விஷயங்கள் எதுவாக இருக்கும் ?
வேலூர் தொகுதி தமிழகத்தில் வெயில் ஊர் என்று அழைக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிக வெயில் பதிவாகிறது. எனவே இந்த வெயிலை போக்க ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் என ஐந்து ஆண்டில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவோம். இதன் மூலம் 110 டிகிரி வரை அடிக்கும் வெயில் அளவை குறைத்து 95 டிகிரி ஆக மாற்றுவோம். அதே போல் பாலாற்றில் ஆண்டுக்கு 10 நாட்கள் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். எனவே அந்த தண்ணீரை சேமித்து வைக்க பல்வேறு இடங்களில் சிறிய அணைகள் கட்டுவோம். கோதாவரி காவிரி இணைப்பு திட்டம், தென்பெண்ணை, பாலாறு ஆகிய திட்டங்களை மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றுவோம்.
தொகுதியின் வளர்ச்சிக்கு உங்களின் முக்கியமான திட்டங்கள் என்ன?
வேலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. எனவே வேலைவாய்ப்பை அதிகரிக்க தனிப்பட்ட முறையில் அவ்வப்போது சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தி கொடுப்பேன். அதேபோல் தற்போது எம்எல்ஏ அலுவலகம் மட்டுமே உள்ளது. எம்பி அலுவலகங்கள் இல்லை. எனவே மத்திய அரசிடம் வலியுறுத்தி எம்பி அலுவலகம் அமைப்பேன். இல்லை என்றால் எனது சொந்த நிதியிலிருந்து அலுவலகம் அமைத்து அங்கு 10 கணினிகள் கொண்டுவந்து இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பதன் மூலம் இப்பகுதியில் இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பு பெறுவார்கள். வேலூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வட்ட சாலை ஏற்படுத்துவேன் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் மேம்பாட்டிற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவேன். மொத்தத்தில் முற்றிலும் மாறுபட்ட பாராளுமன்ற உறுப்பினராக நான் இருப்பேன்.