வேலூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.12), 3 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஒரு ஒன் இந்தியா ஆகிய 4 வங்கி ஏடிஎம் மையங்களிலிருந்து 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், ஏடிஎம் மையங்களில் நேரில் சென்றுசிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஏடிஎம் மையத்தில் ஆய்வு செய்த வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கண்ணன், ஏடிஎம் மையத்தை சரியாகக் கையாளத் தெரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், கொள்ளையர்களை பிடிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு - ஆந்திரா எல்லைகளான கிறிஸ்டியான்பேட்டை, பத்தளப்பள்ளி,சைனகுண்டா உள்ளிட்ட 6 மாநில எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வழியாகச் செல்லும் ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனம், லாரி ,பேருந்து, கார் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.