வேலூர்:சத்துவாச்சாரி பகுதியில் வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகமான ஆவின் இயங்கி வருகிறது. இங்கு இருந்து சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பால் முகவர்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது.
இந்த ஆவின் பால் வேலூர் உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள முகவர்கள் கடைகளுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த முறையில் மினி லாரிகள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பால் பாக்கெட்களை எடுத்துச் செல்வதற்காக ஒப்பந்த வாகனங்கள் ஆவின் அலுவலகத்திற்கு வழக்கம்போல் வந்துள்ளன.
அங்கு உள்ள நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகள், வாகனங்களின் பதிவு எண்கள் மற்றும் வந்த நேரம் உள்ளிட்டவற்றை வழக்கம்போல் குறிப்பெடுத்து எழுதி உள்ளனர். அப்போது, ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு மினி லாரிகள் ஆவின் அலுவலகத்திற்கு உள்ளே வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அதனை உறுதி செய்வதற்காக காவலாளிகள் வாகனங்கள் பால் பாக்கெட் ஏற்றிக் கொண்டிருந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அந்த நேரத்தில், அங்கு ஒரே பதிவெண்கள் கொண்ட இரண்டு மினி லாரிகள் நிற்பதைக் கண்டு காவலாளிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்னர், உடனடியாக காவலாளிகள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.