வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிஷோர் (25), பாலாஜி (25). நண்பர்களாகிய இருவரும் நேற்று (ஆக.9) மாலை வீட்டின்முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப், காட்பாடியைச் சேர்ந்த ஹரி ஆகியோர் கிஷோர், பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றவே பிரதாப், ஹரி இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கிஷோர், பாலாஜியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் பாலாஜியின் இடது மணிக்கட்டு துண்டானது. கிஷோர் என்பவருக்கு தலை, தாடையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் பலத்த காயத்துடன் இருந்த இருவரையும் மீட்டு சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல், வண்டி அடமானம் வைத்தது தொடர்பான பிரச்னை காரணமாக இந்த மோதல் நடந்தது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் மூதாட்டிக்கு அறிவாள் வெட்டு - 4 பேர் கைது