அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேலூர்: ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலத்தின் அமமுக கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.03) வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது" என்று அனைவரது முன்பும் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி முடிவான பின்பு, அது குறித்து உங்களுக்கு தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அம்மாவின் இயக்கத்தை கையகப்படுத்தி வைத்திருக்கும் சுயநலவாதிகள், நீதிமன்றத்தில் அவர்கள் தோலுரிக்கப்படுகின்ற காலம் விரைவில் வரும். தமிழ்நாட்டு மக்கள் என்றும் துரோகத்திற்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். விஜயகாந்த் நல்ல மனிதர், அவருடைய மரணம் வருத்தம் அளிக்கிறது" என்றும் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் கூறிய டிடிவி தினகரன், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கையில்தான் உள்ளது" என தெரிவித்தார்.
மேலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இதைத்தான் நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் அளித்தார்.
இதையும் படிங்க:'ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் எனக்கு பெருமை' - நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்