வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கத்தில் சரக்கு ரயில் ஷெட் ஒன்று உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்படும் கார்கள் இங்கு கொண்டு வரப்பட்டு சரக்கு ரயிலில் ஏற்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
அந்த வகையில் இன்று கார்களை ஏற்றுவதற்காக அதிகாலை ரயில் என்ஜின் ஒன்றில் 14 பெட்டிகளை இணைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுவந்தனர். அப்போது முக்கிய ரயில் பாதையில் ரயில் பெட்டிகளை இணைக்கும்போது எதிர்பாராத விதமாக என்ஜினில் இருந்து ஐந்தாவது, ஆறாவது பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடம்புரண்ட இரண்டு பெட்டிகளை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்தப் பிரச்னையால் காட்பாடியிலிருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் பழனி விரைவு ரயில், பெங்களூருவில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் விரைவு ரயில், மங்களூரு விரைவு ரயில், ஆலப்புழா விரைவு ரயில், காவேரி விரைவு ரயில், கோயம்புத்தூர் சேரன் விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர், சுமார் 90 நிமிடங்கள் கழித்து விபத்துக்குள்ளான பெட்டிகள் தூக்கி நிறுத்தப்பட்ட பின்னர் ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டன.