வேலூர்:கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளியின் விலை ஒவ்வொரு நாளும் பங்கு சந்தையின் நிலவரம் போல் அதிகரித்தும் குறைந்தும் வந்தது. அதிகபட்சமாக கிலோ ரூ 200 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. நாள்தோறும் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அத்துடன் புது விதமாக பொதுமக்கள் தக்காளி விலை குறைய வேண்டி கடவுள்களுக்கு, காணிக்கையாகவும், மாலைகளாகவும் தக்காளியை அணிவித்து பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட மக்களுக்கான நற்செய்தியாக தக்காளி வரத்து அதிகரிப்பால் நேதாஜி மார்க்கெட்டில் சனிக்கிழமை (ஆகஸ்ட். 5) தக்காளி விலை சரிந்து ஒரு கிலோ 60 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம், உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிறிது ஆறுதல் அடைந்தனர்.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்கள், ஓசூர், ராயப்பேட்டை, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைய தொடங்கியுள்ளது.