வேலூர்:வேலூர் மாவட்ட திமுக சார்பில் 'திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம்' இன்று(ஜூன் 15) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.பி. ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தடையாக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தடையாக இருப்பது தமிழ்நாடு அல்ல. கர்நாடக அரசு தான். முதலில் ஒப்பந்தம் முடிந்துவிட்டது எனக் கூறி தடை போட்டது கர்நாடக அரசு. பின்னர் தீர்ப்பாயம் வேண்டும் என்று கேட்டபோது, அதைத் தடுக்க வந்ததும் கர்நாடக அரசு. தீர்ப்பாயம் வந்த பிறகு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததும் கர்நாடக அரசு.
தேர்தலுக்காக ஸ்டன்ட் அடிப்பது யார்?:தீர்ப்பாயம் வந்த பிறகு அரசாணை போட்ட பிறகும் மூன்று ஆண்டுகள் காவிரி நீர் மேலாண்மை குழுவுக்கு தலைவரை நியமிக்க விடாமல் தடுத்ததும் கர்நாடக அரசு. காவிரி வரலாற்றில் ஒவ்வொரு அங்குலமாக எதிர்த்தது, கர்நாடக அரசு. அவர்கள் தமிழ்நாட்டை குற்றம் சொல்வது பெருமை அல்ல. கர்நாடக முதலமைச்சரின் கருத்து சரியல்ல. காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதலமைச்சருக்கு தெரியவில்லை' என்றார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், 'முதலமைச்சர் எழுதிய கடிதத்தை ஒன்றிய அரசு ஏற்காது என்கிறார். மத்தியிலும் பாஜக, கர்நாடகாவிலும் பாஜக. நாங்கள் சொல்வதைத் தான் ஒன்றிய அரசு கேட்கும் என மறைமுகமாக கர்நாடக முதலமைச்சர் கூறுகிறார்.