வேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் மாவட்ட மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் பங்கேற்ற ஊழியர்கள் மின் வாரியத்தில் பணிபுரியம் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரபடுத்துவது, ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தி ரூ.380 கூலி வழங்க வேண்டும், புயல் காலங்களில் பணியாற்றியபோது அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், கேங்க்மேன் பணி நியமனத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் முற்றுகை போராட்டம் நடதியவர்களை காட்பாடி காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோல் திருச்சியிலும் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தென்னூரில் உள்ள மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதற்கு சிஐடியு மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் அகஸ்டின், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், பெரம்பலூர் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், பெரம்பலூர் வட்ட பொருளாளர், கண்ணன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்.