வேலூர்:வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே நேற்று (டிச.19) சந்தேகப்படும் படியாக 3 நபர்கள் வெள்ளை நிற பாலித்தீன் பையுடன் நின்று கொண்டிருந்ததை காட்பாடி போலீசார் கவனித்து உள்ளனர். இதனால் அந்த மூன்று நபர்களையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து, விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில், மொத்தம் 14 கிலோ எடையிலான கஞ்சா 6 பண்டல்களில் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த ரஹீம் (வயது 46), உதயகுமார் (40), பட்டன் மாவட்டம் காரியம் சிக்டார் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (41) என்பது தெரிய வந்தது. மேலும் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.