வேலூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு 1.19 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4.20 மணிக்குள் நான்கு ஏடிஎம் மையங்களில் வெல்டிங் இயந்திரங்கள் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. டாடா சுமோ காரில் வந்த முகமூடி கொள்ளை கும்பலைப் பிடிக்க வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் 5 காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஹரியானா மாநிலம் மேவாத் பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளை கும்பலாக இருக்கலாம் எனக் காவல் துறையினர் கருதி வருகின்றனர். போளூரில் தனிப்படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் சுங்கச்சாவடி இருந்து தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை, சித்தூர். பலமனேரி வழியாகக் கர்நாடக மாநிலம் கே.ஜி.ஃப் சென்றது தெரியவந்துள்ளது.
மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க டிஎஸ்பிக்கள் தலைமையில் சென்ற தனிப்படையினர் ஹைதராபாத், நாக்பூர், அகமதாபாத், ஹரியானாவில் துப்பாக்கிகளுடன் முகாமிட்டுள்ளனர். ஏடிஎம் கொள்ளை கும்பல் கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அங்கிருந்து காரில் புறப்பட்ட கும்பல் சுங்கச்சாவடி வழியைப் பயன்படுத்தாமல் திருவண்ணாமலைக்கு வந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றிவிட்டு மீண்டும் அதே வழியில் பணத்துடன் தப்பியது தெரியவந்தது.