வேலூர்: காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுபாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத 66 பணியாளர்களை 2013-ஆம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் இவர்களுக்கு இதுவரை பணி வழங்கப்படாமல் உள்ளது. இதனால், பணிநீக்கம் செய்யப்பட்ட 66 தொழிலாளர்கள் குடும்பங்களும் வறுமையில் பாதிக்கப்பட்டு வருவதை கவனத்தில் கொண்டு உடனடியாக அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தில் லஞ்சம், முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தி 12 மாதங்களாகியும் இதுவரை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும், உடனடியாக அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளுவர் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு நேற்று (ஆகஸ்ட் 02) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சங்கத்தின் கௌரவத்தலைவரும், முன்னாள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான ஐ.இளங்கோவன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தை பேராசிரியர் எஸ்.குமார் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழக மற்றும் உறுப்பு கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்கள் பறையடித்து கோஷங்கள் எழுப்பினர்.