வேலூர்: காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சுமார் 130 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக ஊரீசு கல்லூரியின் வேதியியல் துறையைச் சேர்ந்த விஜயகுமார் என்ற பேராசிரியருக்கு, விடைத்தாள்களை திருத்த வருமாறு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுபாட்டு அலுவலகத்தில் இருந்து அழைப்பாணை வந்துள்ளது.
ஆனால், பேராசிரியர் விஜயகுமார் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்து இரண்டு ஆண்டுகளான பேராசிரியருக்கு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான அழைப்பு வந்தது கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் இது குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுபாட்டு அலுவலர் சந்திரன் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் 130 உறுப்புக் கல்லூரிகள் உள்ளது. இவற்றில் உள்ள சில கல்லூரிகள், தங்கள் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் குறித்த விவரத்தை முழுமையாக அளிப்பதில்லை.
குறிப்பாக பணி மாறுதலில் செல்லும் பேராசிரியர்கள், ஓய்வு பெறும் பேராசிரியர்கள் மற்றும் உயிரிழக்கும் பேராசிரியர்கள் குறித்த விவரத்தை அளிப்பதில்லை. இதன் காரணமாகவே இது போன்ற தவறுகள் நடக்கிறது. இதனை தடுக்கவே கூகுல் ஷீட் மூலம் அனைத்து கல்லூரியிலும் உள்ள அனைத்து பேராசிரியர்களையும், விவரத்தையும் அவர் அவர்களையே பதிவு செய்ய தெரிவித்துள்ளோம்.
இதன் மூலம் வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காதவாறு தடுக்க முடியும். அதேபோல் அனைத்து கல்லூரிகளும், தங்கள் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மாறுதலாகி செல்லும்போது, அதன் விவரத்தை உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு முறையாக தெரிவிக்குமாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்” என கூறினார்.
இதையும் படிங்க:உயிரிழந்த பேராசிரியருக்கு விடைத்தாள் திருத்த அழைப்புக்கடிதம் விடுத்த பல்கலைக்கழகம்!