திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி இமான்(28). இவருடைய மனைவி பரிதா கடந்த 21ஆம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் அலைபேசியில் மருத்துவர்களிடம் விவரம்கேட்டு பரிதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் உயிரிழந்த பரிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளரிடம் அஸ்லாம் பாஷா பேசுகையில், "பரிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்களின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.