திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், மாதனூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களுடைய அழைபேசி எண்ணிற்கு மோசடி கும்பல் தொடர்புகொண்டு இணையதளம் மூலம் சிறப்புச் சலுகை உள்ளதாகக் கூறி 300 ரூபாய் மதிப்பிலான சோலார் மின்விளக்குகளை மூவாயிரம் ரூபாய் எனவும் சிறப்புச் சலுகையாக ஆயிரத்து 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்றும் கூறி பார்சல் கொண்டுவருபவர் அழைபேசி எண்ணை கொடுத்து விற்பனை செய்துவந்துள்ளனர்.
இந்நிலையில் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கு மோசடி கும்பல் அழைப்பு விடுத்து சலுகை குறித்து பேசியுள்ளனர். அதற்கு அவர் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மோசடி நபர்கள் இளங்கோவின் அலைபேசிக்கு தொடர்ந்து அழைப்புவிடுத்து அவரை சரமாரியாக அவதூறாகத் திட்டியுள்ளனர். இது குறித்து இளங்கோ ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.