வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி பகுதியில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஸ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலி மதுபான பாட்டில்கள் தயாரித்தவர்கள் கைது அதனடிப்படயில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி தலைமையிலான தனிப்படையினர் மல்லப்பள்ளி ஏரியூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள சிறிய வீட்டில் திருப்பத்தூரை அடுத்த செவ்வாத்தூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன், கோவிந்தராஜ், சரவணன் ஆகியோர் போலி மதுபான பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்துவது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 720 போலி மதுபாட்டில்கள், மதுபானம் தயாரிக்கும் இயந்திரம், மற்றும் போலி மதுபான நிறுவனத்திற்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இதுபோன்று திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர், கவுண்டப்பனூர், நடுப்பட்டு போன்ற பகுதிகளிலும் போலி மதுபான நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது.