வேலூர்: காட்பாடி அருகே காங்கேயநல்லூரில் 1906 ஆண்டு, ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார். இவர் தனது தந்தை மல்லையதாசர் பாகவதரிடம் கல்வி, இசை, இலக்கியங்கள் கற்று 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். 12 வயதுக்குள்ளாக பதினாராயிரம் பண்களை கற்று, தனது 18வது வயதிலேயே சிறப்பாக ஆன்மீக சொற்பொழிவாற்றும் ஆற்றல் கொண்டிருந்தார்.
தீவிர முருக பக்தரான இவர் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமயம், இலக்கியம், பேச்சு, எழுத்து, இசை என பன்முக புலமை பெற்ற இவர் தனியாகவே புராண பிரசங்கங்களும் செய்து வந்தார். இவரது பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கையொட்டி அமைந்திருந்ததால் பாமர மக்களின் உள்ளங்களையும் தன் பேச்சாற்றலால் கவர்ந்திருந்தார்.
இதன்மூலம் கிருபானந்த வாரியார் 'அருள்மொழி அரசு' என்றும் 'திருப்புகழ் ஜோதி' என்றும் அனைவராலும் பாராட்டப்பெற்றார்.
இவர் 150க்கும் மேற்பட்ட ஆன்மீக நூல்களை இயற்றியதுடன், 500க்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஆன்மீக சொற்பொழிவுக்காக லண்டன் சென்றுவிட்டு 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தாயகம் திரும்பும் வழியில் கிருபானந்த வாரியார் விமானத்திலேயே சித்தி அடைந்தார்.