சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் மாயமானார். அவரை மீட்டுத் தரும்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில், ஆந்திர ரயில்வே காவல்துறையினர் நேற்று முகிலனை மீட்டனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்தில் தமிழ்நாடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அங்கு, வேலூர் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், சிபிசிஐடி காவல் துறையினர் முகிலனிடம் 30 நிமிடம் விசாரணை நடத்தினர்.
பிறகு, துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்புடன் வெளியே அழைத்து வரப்பட்டபோதும் கூட, "தடை செய்... தடை செய்... ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்..அணுக்கழிவு கொட்டுவதை தடை செய்" என்று அந்த நடுங்கும் குரலில் முகிலன் ஆவேசத்துடன் முழங்கியபடி சென்றார்.
அப்போது, அங்கிருந்த முகிலனின் ஆதரவாளர்கள் சிலரும், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விவரம் அறியாத பயணிகள் வியப்புடன் பார்த்தனர்.
பின்னர், முகிலன் காவல்துறை வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வேலூர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து முகிலனை காவல் துறையினர் அழைத்துவரும் காட்சி அங்கு, அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, மீண்டும் பலத்த பாதுகாப்புடன் முகிலன் வெளியே அழைத்து வரப்பட்டார்.
அப்போது ஆர்வத்துடன் வெளியே காத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், " காலை 10 மணிக்கு ஆந்திராவில் 7 தமிழர்களை (ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள்) விடுதலை செய்யக் கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தினேன். அப்போது, என்னை கைது செய்தார்கள். பிறகு, இரவு 10 மணிக்கு தன்னை காட்பாடிக்கு அழைத்து வந்தார்கள். இரண்டு மாதங்களாகத் தன்னை மனநலம் பாதிக்க வைத்தார்கள்" எனக் குமுறினார். அவரை பேசவிடாமல் காவல்துறையினர் வேகமாக அழைத்து சென்றனர்.