வேலூர்: அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன் (50), வெங்கடேசன் (51). இவர்கள் இருவரும் ஒடுகத்தூர்-மேல் அரசம்பட்டு சாலையோரம் தனித்தனியே அடுக்குமாடிகள் கட்டி, கடைகளை வாடகைக்கு விட்டு வருகின்றனர்.
இங்கு மாட்டுத் தீவனம், ஹோட்டல், சலூன், மளிகை, பழக்கடை, டீக்கடை, வெல்டிங் ஷாப், மோட்டர் பழுதுபார்க்கும் கடை உள்ளிட்ட 9 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளை அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல் இன்று ( ஏப்.19 ) காலை கடையைத் திறக்க கடையின் உரிமையாளர் வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
அருகே உள்ள விநாயகர் கோயில் உண்டியல் உட்பட டீக்கடையில் வைத்திருந்த பண், பிரெட், சிகரெட், ஸ்வீட், சப்போட்டா பழம் ஆகியவையும், மல்லிகை கடையில் இருந்த சாக்லெட், பிஸ்கெட் போன்ற தின்பண்டங்களையும் விட்டு வைக்காமல் சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பின்பு எடுத்துச் சென்றுள்ளனர்.