வேலூர்:சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுவித்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 07.11.2022 முதல் இவ்வழக்கு வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி பேசியதென்ன?
அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது சுமத்தப்பட்டுள்ள அரசு குவாரியிலிருந்து அதிக அளவு செம்மண் எடுத்த வழக்கில் முகாந்திரம் உள்ளது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் மட்டும் விடுதலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கே.ஜி.எப். காப்புரிமை மீறல் வழக்கு : ராகுல் காந்தி மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு!