வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் காட்பாடி குளக்கரை தெருவில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம் மற்றும் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் திமுக பொருளாளர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசுகையில், மக்களை நெகிழ்ச்சியூட்டும் விதமாக குட்டிக் கதை ஒன்றைக் கூறினார். அதில், 'எல்லோரும் என்னிடம் நீங்கள் மட்டும் எப்படி ஒரே தொகுதியில் மீண்டும், மீண்டும் எம்எல்ஏவாக வெற்றி பெறுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இது என் தொகுதி என்கிறார்கள். நான் தொகுதியை திருக்கோயிலாகத் தான் கருதுகிறேன். ஒரு தாய் தனது குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைப்பார். கடைசியில் பெற்ற தாயையே மகன் தூக்கி எறிந்து விடுவான். எனவே பெற்ற தாயை தூக்கி வீசும் இந்த சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை தூக்கி வீசுவது புதிதா?
மகன் தாயை மதிக்காவிட்டாலும் அந்தத் தாய் கடைசி வரை மகனுக்கு நல்லதுதான் செய்வார். அது போலத் தான் நான் தொகுதிக்கு நல்லது செய்து உதாரணமாக இருக்கிறேன். ஒருவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். அந்தப்பெண் நான் வேண்டும் என்றால் உனது தாயின் மார்பை வெட்டி அவளது இதயத்தைக் கொண்டு வா என்றால்... உடனே காதல் மயக்கத்தில் அந்த ஆணும் தன் தாயின் மார்பை வெட்டி இதயத்தை தூக்கிக் கொண்டு ஓடினான். அப்போது கால் தவறி விழுந்த போது, இதயம் ஒரு ஓரத்தில் கிடந்தது. உடனே அந்த இதயம் மகனைப் பார்த்து கேட்டது, மகனே அடி பலமா? மகன் தன்னை கொன்றாலும் கூட அவன் கீழே விழும்போது தாய் அக்கறை கொள்கிறாள். அதுபோலத்தான் நானும் செயல்படுகிறேன்' என்று கூறினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் என்ன முதலீட்டுக்காக வெளிநாடு சென்றார்? என்னென்ன கொண்டு வரப் போகிறார்? எந்தெந்த நாட்டைச் சுற்றி பார்க்க போகிறார் என்பது தெரியவில்லை. அவர் வந்தால் தான் தெரியும். நாங்கள் விமர்சனம் செய்யக் கூடாதா? அவர் சொல்லிவிட்டு சென்றிருக்க வேண்டாமா? எங்களுக்குக் கூட வேண்டாம் பத்திரிகைகளுக்கு சொல்லியிருக்க வேண்டாமா? அரசு பணத்தில் செல்லும்போது நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டாமா... எந்த காரியத்திற்காக செல்கிறேன் என்று" என கடும் கோபத்துடன் பேசினார்.
பிறகு சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டது குறித்து பதில் அளித்த அவர், பொதுவாக வட மாநிலத்தில் தான் இதுபோன்று நடக்கும் இது தமிழகத்திலும் நடந்திருக்கிறது. இதுதான் பாஜகவின் கலாசாரம் எனவும் துரைமுருகன் பேசினார்.