வேலூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச்சேர்ந்தவர், சதீஷ். இவர் ஒரு வழக்குத்தொடர்பாக தனது வழக்கறிஞரை சந்திக்க இன்று(செப்.14) வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தபோது, தனது டாடா சுமோ வாகனத்தை வெளியே விட்டுச்சென்றுள்ளார். மீண்டும் திரும்ப வந்து வாகனத்தை எடுக்க முயன்ற போது திடீரென வாகனத்தில் புகை வந்து தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
காருக்கு உள்ளே மாட்டிக்கொண்ட சதீஷ் என்பவரை, கார் கண்ணாடியை உடைத்து பொதுமக்கள் மீட்டுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக படுகாயம் ஏதும் இன்றி சதீஷ் தப்பியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.