வேலூரிலிருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை கடுமையான பனிப்பொழிவு இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
இச்சூழ்நிலையில் முன்னாள் சென்ற லாரி தெரியாததால் பின்னால் வந்த கார் லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்தக் காருக்கு பின்னால் வந்த மூன்று லாரி, ஐந்து கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து நடைபெற்ற வாகன விபத்து இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கும், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து நடைபெற்றதாகக் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.
முன்னதாக விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தற்செயலாக வந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மற்றவர்களுக்கு மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்துதந்தார்.
இதையும் படிங்க:மகன் மரணத்தில் சந்தேகம் - தந்தை புகார் மனு!