வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ரகு(52 ). இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மலர்விழி. இவர்களது மகன் தனசேகர் அதே பகுதியில் ஃபைனான்ஸ் நடத்தி வருபவரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஐந்தாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து பணம் கொடுத்த நபர் தனசேகரின் தந்தை ரகுவை தொடர்புகொண்டு கடனை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவரும் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஃபைனான்ஸ் நடத்தி வருபவருக்கும், ரகு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு வேலை முடித்துவிட்டு ரகு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செவிடாத்தம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென்று அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் ரகுவை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்துள்ளார்.