தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் வள்ளிமலை கோயில் படிக்கட்டில் இளைஞர் சடலம்: போலீசார் விசாரணை! - வள்ளிமலை முருகன் கோயில்

காட்பாடி அடுத்த வள்ளிமலை கோயில் படிக்கட்டில் இளைஞர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காட்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வள்ளிமலை கோயில் படிக்கட்டில் இளைஞர் சந்தேக மரணம்
வள்ளிமலை கோயில் படிக்கட்டில் இளைஞர் சந்தேக மரணம்

By

Published : Apr 12, 2023, 5:59 PM IST

வள்ளிமலை கோயில் படிக்கட்டில் இளைஞர் சந்தேக மரணம்

வேலூர்: காட்பாடி அடுத்த பள்ளி மலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் இன்று ( ஏப்.12 ) காலை சுமார் ஆறு மணியளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காகப் பக்தர்கள் மலைப்பாதை வழியாகச் சென்றனர். தரிசனத்திற்குப் பிறகு கோயிலை வலம் வந்தனர்.

அப்போது, கோயில் பக்கவாட்டு பகுதிக்கு வந்த பொழுது இளைஞர் ஒருவர் பற்கள் மற்றும் முகம் உறைந்த நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து கோயில் அர்ச்சகரிடம் தெரிவித்தனர். கோயில் அர்ச்சகர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேல்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சடலமாகக் கிடந்த நபருக்கு சுமார் 30 வயது இருக்கும் வெள்ளை நிறத்தில் கட்டம் போட்ட சட்டை கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். அவரது பற்கள் உடைந்துள்ளன. மேலும், தலையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை எனக் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

கோயிலைச் சுற்றி வந்தபோது குன்றின் மீது இருந்து தவறி விழுந்து தலையில் காயம் அடைந்து இறந்தாரா அல்லது எப்படி இறந்தார் எனக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தின் அருகே செல்போன் ஒன்று உடைந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோயில் பூஜைகள் முடிந்த பின்னர் நடை சாற்றப்படுவதற்கு முன் அர்ச்சகர்கள் வலம் வருவது வழக்கம் அதன்படி நேற்றிரவு கோயிலை அர்ச்சகர்கள் சுற்றி வந்தனர். அப்பொழுது அங்கு யாரும் இல்லை எனத் தெரிகிறது. எனவே, அதன் பின்னர் இளைஞர் கோயில் பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனக் காவல் துறையினர் கருதுகின்றனர்.இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து காட்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:லிவிங் டு கெதர் பெண்ணின் சடலத்துடன் வாழ்ந்த இளைஞர் - கொலையா? தற்கொலையா?

ABOUT THE AUTHOR

...view details