வேலூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக அளவிலான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று (மே. 29) வந்தார். அவரை சரக டிஐஜி ஆனி விஜியா, எஸ்பிக்கள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), பவன்குமார் (திருவண்ணாமலை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), தீபா சத்யன் (ராணிப்பேட்டை) ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து டிஐஜி, எஸ்பிகள், ஏஎஸ்பி, ஏடிஎஸ்பிகள், டிஎஸ்பிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் வேலூர் சரகத்திலுள்ள 4 மாவட்டங்களில் குற்றங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்தும், துப்பு துலங்காமல் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணைக்கு நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் மீது எடுக்கப்பட்டு வரும் கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிர படுத்துதல் தொடர்பாக பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்துவது குறித்தும், இணையதள குற்றங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சைபர் கிரைம் பிரிவு காவலர்களுக்கு நிபுணர் தத்துவத்தை மேம்படுத்தி கொடுக்கப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்தும், பொது மக்கள் கொடுக்கும் புகார் மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை விரைந்து களைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் டிஜிபி கேட்டறிந்தார்.