வீட்டுப்பாடம் சரியாக செய்யாததால் ஆசிரியை கட்டையால் அடித்ததில் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி வேலூர்:இளவம்பாடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் அப்பகுதியில் சுற்றி உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கம்மார் பாளையம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
மாணவிகளுடைய வகுப்பாசிரியை தீபலட்சுமி என்பவர் மாணவிகள் வீட்டுப் பாடம் எழுதி வந்த நிலையில் அதனைத் திருத்திக் கொண்டிருந்தார். அப்போது சில இடங்களில் ஸ்கெட்ச் பேனாவால் எழுத வேண்டும், ஏன் சாதாரண பேனாவால் எழுதினீர்கள் எனக் கேட்டு கட்டை ஸ்கேல் மற்றும் அருகிலிருந்த கட்டையால் மாணவிகள் கைகளில் அடித்துள்ளார்.
இதில் கைகளில் ரத்தம் கட்டி வீங்கிய நிலையில் மாணவிகள் அழுது கொண்டு வீட்டிற்குச் சென்று தகவல் அளித்துள்ளனர். மாணவிகளின் பெற்றோர்கள் மாணவிகளை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து ஆசிரியை மீது புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை வாலிபர் படுகொலை தொடர்பாக 5 பேர் கைது- மேலும் இருவருக்கு வலைவீச்சு!
இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கூறுகையில் “என்னுடைய மகள் இளவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் வகுப்பு ஆசிரியை பாடம் ப்ராஜக்ட் செய்து வரச் சொன்னார்கள். அதனால் மாணவிகளைக் கட்டையால் அடித்துள்ளார். என் மகளுக்கு ரத்தக் கட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அரசு கலை, அறிவியல் கல்லூரி முதுநிலை சேர்க்கைக்கு ஆக.14 முதல் விண்ணப்பம்!
ஆசிரியை அடித்த மற்றொரு மாணவியின் தாத்தா பேசுகையில் “ என் பேத்தி இளவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். என் பேத்தியை வீட்டுப்பாடம் சரியாகச் செய்யாததால் கட்டையால் எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு ஆசிரியை அடித்துள்ளார். என் பேத்திக்குக் கையில் வீக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இந்த விவகாரம் குறித்து கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்” எனக் கூறினார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூரில் கடந்த எட்டு நாட்களில் 250 கிலோ குட்கா பறிமுதல் - 10க்கும் மேற்பட்டோர் கைது!