வேலூர்:வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (செப்.20) பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திறந்த வைத்தார். பின்னர் புதிய மருத்துவக் காப்பீடு சிகிச்சைப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், "பிரதமர் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டங்கள் மூலம், நாட்டில் உள்ள ஏழை எளிய நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். சிஎம்சி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டில் உள்ள நோயாளிகள் மற்றும் பிறமாநில நோயாளிகளுக்கும் பயனளிக்கும்.
இதன் மூலம் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து கூட வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்படும் வகையில் மாவட்டத்திற்கு முன்னோடியாக இந்த மருத்துவமனை உள்ளது.
இதனால் பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதம மந்திரியின் ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் சிஎம்சி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் காப்பீடு திட்டங்களால் மக்களுக்கு பயனளிக்கும். மேலும் மருத்துவத்துறை மேம்பாடு அடைய ஆரோக்கியமான சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.