வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், வேலூர் மக்களைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பரப்புரை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவைத்தலைவர் மதுசூதனன், எம்ஜிஆரால் வளர்க்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன், நன்றி மறந்து அவரை சட்டப்பேரவையில் விமர்சித்தார் என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், பொய் பித்தலாட்டம் செய்வதில் கருணாநிதியையே, ஸ்டாலின் மிஞ்சி விட்டதாக விமர்சித்த மதுசூதனன், அதிமுகவின் வரலாற்றை பொறுத்தவரை ஒரு தோல்விக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது எனவும், அந்த வகையில் வேலூரில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.