வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தினந்தோறும் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் துறைக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை பிடிப்பதே பெரும் சவாலாகவும், தலைவலியாகவும் இருக்கின்றது.
வேலூர் மாவட்டம் ஆந்திர மாநில எல்லையை கொண்ட மலை பகுதிகளும், அணைகட்டு தொகுதியில் அதிக மலை பகுதிகளையும் கொண்டது. இந்த மலை பகுதிகளில் வழக்கமான நாள்களிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது வாடிக்கை. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் அரசு மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் தற்போது அதிகம் கள்ளச்சாராயத்தின் பக்கம் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
காவல் துறை கரோனா தடுப்பில் அதிக கவனம் செலுத்துவதை அறிந்த கள்ளச்சாராய விற்பனையாளர்கள், இதை தங்களுக்கு சாதகமாமக பயன்படுத்திக்கொள்ள நினைத்து அதிக அளவில் சாராயத்தை காய்ச்சி பாக்கெட்டில் அடைத்து கள்ளத்தனமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
டாஸ்மாக்கைவிடவும் விலை குறைவு, போதை அதிகம் என்பதால் மது பிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன.
குறிப்பாக கடந்த 2ஆம் தேதி அணைகட்டு அடுத்த புலிமேடு வெல்லண்டப்பன் கோயில் மலை அடிவாரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட ஊர் மக்கள் மூன்று பேர் மீது கள்ளச்சாராய வியாபாரிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக குற்றவாளிகள் மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.