வேலூர்:கொசப்பேட்டை மாசிலா மணி தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (63). இவரது மகன் சரத்குமார் (27) சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
சமையல் மாஸ்டரான சரத்குமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து, அவரது தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 25) வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சரத்குமார், அவரது தாய் மற்றும் தந்தையிடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சரத்குமாரின் தந்தை தேவராஜூக்கும், சரத்குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாற, தேவராஜ் தன் மகன் சரத்குமாரை கையில் கிடைத்த பொருட்களால் தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சரத்குமார் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தை தேவராஜ் காலையும், கழுத்தையும் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தேவராஜ், ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்துள்ளார்.