வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அகரம் புதுமனை கிராமத்தில் வசித்து வருபவர் அருள். கூலி தொழிலாளியான இவருக்கு அனிதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் ஹரிஷ்(6) அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஹரிஷ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள மராட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்பட்டு பின்னர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதாகக் கூறி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து அகரம் பகுதிக்குச் சென்ற வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர், ஆம்பூர் வட்டாட்சியர், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டபோது, சிறுவனின் உறவினர்கள் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையம் படிங்க:15 ரூபாய்க்கு விற்கப்படும் போதை ஊசிகள்; தமிழ்நாட்டிற்குள் ஊடுருவிய போதை ஊசி கும்பல்!