வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி வேலம்பட்டு கேட் பகுதியில் கருணாகரன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கட்டடம் ஒன்று உள்ளது. இதனை, தனியார் போர்வெல் நடத்துபவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில், லத்தேரி பெட்ரோல் பங்க் உரிமையாளரும் வேலூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர் சங்கச் செயலாளருமான சந்திரசேகரன், அந்த கட்டடத்தை எதேச்சையாகச் சென்று பார்த்த போது, அங்கு போலி பெட்ரோல், டீசல் தயாரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
பேரல் பேரலாக போலி எரிபொருள் பறிமுதல் மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கப் பயன்படும் ரசாயனம், இயந்திரங்கள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து லத்தேரி காவல் துறைக்கு வணிகர் சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி பெட்ரோல் பேரல்கள், 2 டேங்கர் லாரிகள், போலி பெட்ரோல், டீசல் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்ததாக வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.