750 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்: ஒருவர் கைது - தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
வேலூர்: பெங்களூருவிலிருந்து தமிழ்நாட்டுக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 750 கிலோ குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், காவல்துறை துணை ஆய்வாளர் ரவி தலைமையில், தலைமை காவலர்கள் ராஜு, மணிவன்னன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 750 கிலோ குட்கா, ஹான்ஸ் போன்ற பொருள்கள் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுக் வந்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன், குட்கா போன்ற பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வாகன ஓட்டுநரான பெங்களூரு சிங்கசந்திராவை சேர்ந்த ஒலிராஜாவை கைது செய்தனர்.
இவர் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்து பள்ளிகொண்டா காவல்துறையினர் கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.