தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பட்டியலினத்தவரை மேலும் ஒடுக்குவதற்கு... 10% இடஒதுக்கீடு!'

வேலூர்: பட்டியலின மக்களை மேலும் ஒடுக்குவதற்காகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்க நினைப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

சீமான்

By

Published : Jul 24, 2019, 3:06 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நேற்று மாலை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் சீமான் பேசுகையில், "தமிழ்நாட்டில் திமுகவை விட்டால் அதிமுகதான், அதிமுகவை விட்டால் திமுகதான் என்று அரை நூற்றாண்டுகளாக வாக்களித்து வறுமையும் ஏழ்மையும் சந்தித்த மக்களுக்கு இரண்டு பேரையும் விட்டால், ஒரு மாற்றாக நாம் தமிழர் கட்சி என்று நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக தொடர்ச்சியாக களத்தில் இறங்கி போராடிவருகிறோம்.

பிரதமர் மோடி தான் பதவியேற்றவுடன் அனைத்து கோயில்களுக்கும் சென்று தாமரை வழங்கிவந்தார். அவருக்கு நம் நாட்டில் நிலவிவந்த குடிநீர் சிக்கல் பற்றி கவலை இல்லை.

இந்த மத்திய அரசின் ஆட்சி ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்கள் வாழவே கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. தற்போது பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு ஒதுக்கீடு கொண்டுவருவதாக கூறுகிறார்கள்.

அவர்கள்தான் முன்னேறிவிட்டார்களே பிறகு எதற்காக அவர்களுக்கு இட ஒதுக்கீடு. நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவரே கோயிலுக்குள் செல்ல முடியவில்லை; அந்தளவுக்கு நாட்டில் தீண்டாமை உள்ளது.

சீமான்

சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை சமூகம் ஒன்று மலரும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அதில் ஓங்கி ஒரு சம்மட்டியை வைத்து அடிப்பது போல் முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் மத்திய அரசு இட ஒதுக்கீடு கொடுக்க இருக்கிறார்கள். இது பட்டியலின மக்களை மேலும் ஒடுக்க நினைக்கும் செயல்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details