வேலூர்:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர், மசிகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு வழக்கம்போல் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இந்நிலையில், அந்த ஆட்டோ பக்காலபள்ளி என்ற இடத்தில் வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. அதில் ஆட்டோவில் பயணம் செய்த பத்தாம் வகுப்பு படிக்கும் 3 பள்ளி மாணவிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சரத்குமார், ராணி, மல்லிகா ஆகிய 2 பெண்கள் என 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அவர்களை உடனடியாக மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பள்ளி நேரங்களில் ஆட்டோவில் அதிக அளவில் பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் ஏற்றிச் செல்வதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனை குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் தடுக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு என கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கோர விபத்து; குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்