திருப்பத்தூர் மாவட்டம் பல்வேறு சிறப்புகளும், பல்வேறு பெருமைகளும் பெயர் பெற்ற ஊராகும். திருப்பத்தூர் நகரத்தை சுற்றி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். திருப்பத்தூரில் பிரதான ஆறுகளான துலாம் நதி, பாம்பாறு, பாலாற்றின் கிளை ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால் இதனை பயன்படுத்திக்கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபடும் மாஃபியாக்கள் ஆறுகளில் மணல்களை திருடி விற்று வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த சுந்தரம்பள்ளி, நத்தம் ஆகிய ஊராட்சிகளின் வழியாக துலாம் நதியில் கடந்த பத்தாண்டுகளாக மணல் திருட்டு தொடர்வதால் அப்பகுதிகளில் ஆறுகள் இருந்த சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. நத்தம், சுந்தரம்பள்ளி, காக்கங்கரை, போன்ற பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களிலும் சுமார் 50 அடி அளவிற்கு ராட்சத இயந்திரங்கள் கொண்டு மணல் கொள்ளை வெகு சிறப்பாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது திருப்பத்தூர் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த செயற்கை மணல் தயாரிக்கும் அவல நிலையைப் பற்றி மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாரிடமும் புகார் அளிக்கப்பட்டது.