வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 81 வயது முதியவருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பதாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் செய்தி பரவி பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில், தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கிருமி கோவிட் -19 என்கிற கொரோனா வைரஸ் ஆகும்.
ஆனால், தங்கள் மருத்துவமனையில் 81 வயது நோயாளிக்கு சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸ் இருப்பதாக வேலூர் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 'அது பொதுவான மனித கொரோனா வைரஸ் (Common human corona viruses - 229E) என்னும் வகையைச் சார்ந்தது மட்டுமே. அதனால் ஒரு பாதிப்பும் இல்லை. நாங்கள் கோவிட்-19 வைரஸ் கொண்ட எந்த நோயாளிகளையும் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை' என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது உலகை அச்சுறுத்தி வருவது நோவல் கொரோனா வைரஸ் (novel corona virus) ஆகும். ஆனால், மருத்துவமனையிலிருந்த 81 வயது முதியவருக்கு இருந்தது சாதாரண சளியில் இருந்த கிருமித்தொற்று மட்டுமே. எனவே, அவர் கொரோனா நோயாளி கிடையாது. பொதுமக்கள் தேவையில்லாமல் இதுகுறித்து பகிரப்படும் வதந்திகள் குறித்து அச்சப்பட வேண்டாம்' எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு வலியுறுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பலாம் என்றும், இதுபோன்ற சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை - பத்மநாபபுரம் அரண்மனை மூடல்!