வேலூர்:அண்ணா கலையரங்கம் அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாநகரச் செயலாளரும், வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு ஆளுநர் ரவி திமுக அமைச்சவையில் இருந்த செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். அவ்வாறு செய்ய அவர் யார்? கவர்னர் அல்ல கவர்னரைப் படைத்த ஆண்டவரே வந்தாலும் திமுக ஆட்சியின் மீதோ, ஸ்டாலின் மீதோ ஒன்றும் செய்ய முடியாது.
எந்த அடிப்படையில் இந்த நோட்டீஸை வீட்டுள்ளீர்கள்? நீ யார், அரசாங்கத்தைப் பார்க்கும் ஒரு காவல் நாய். அமைச்சரவையை அமைக்கும் உரிமை எந்த காலகட்டத்திலும் கிடையாது. அமைச்சரவைக்குத்தான் எல்லா அதிகாரமும் உண்டு. ஆளுநருக்கு அதிகாரம் எல்லாம் கிடையாது. அவர் கொடுத்துள்ள நோட்டீஸை நாளை பெற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் திமுக சட்டபடி வழக்கு தொடுத்து சந்திக்க இருக்கிறோம்.
மணிப்பூரில் பெரிய கலவரம் நடக்கிறது. அதனை உயிரை பணயம் வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று மக்களை சந்திக்கச் சென்றால், அங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரமும், செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரமும் நாளை இந்தியாவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும். இந்த ஆளுநரை மோடியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. நீதிமன்றம் நினைத்தால்கூட மோடி ஆட்சியை கலைக்கலாம். அந்த நிலை ஏற்படும்" என பேசினார்.