வேலூர் மாவட்டம், வாலாஜா அருகே உள்ள நெல்லிக்குப்பம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்காளம். இவரது கணவர் இந்திய ராணுவப் படையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அங்காளம் மற்றும் அவரது கணவர் பெயரில் பெல் - முகுந்தராயபுரம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில், முகவரி மாறிச்சென்ற தனது ஏடிஎம் கார்டை தவறாகப் பயன்படுத்தி ஒருவர் ரூ.1.95 லட்சம் மோசடி செய்துள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அங்காளம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது மனுவில், ஏற்கெனவே உள்ள தனது பழைய ஏடிஎம் அட்டை செயல்படாமல் போனதால் புதிய ஏடிஎம் அட்டை வழங்குமாறு பிப்ரவரி மாதம் வங்கியில் மனு கொடுத்திருந்ததால் புதிய ஏடிஎம் கார்டு தபாலில் அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ வீரர் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஆனால் அதே பகுதியில் வசித்துவரும் தன் கணவர் பெயரைக்கொண்ட வி. ராஜா என்பவரிடம் தபால்காரர் தவறுதலாக ஏடிஎம் கார்டைக் கொடுத்துள்ளார். இதனைப் பயன்படுத்தி வி. ராஜா வங்கிக்குச் சென்று தனது தொலைபேசி எண்ணை இணைத்துள்ளார். மேலும் தன் கணவர் அனுப்பும் சம்பளப் பணம் வந்தவுடன் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்வரை பணம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, கிளை மேலாளரிடம் சென்று புகார் கொடுத்தபோது 'இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை முதலில் வெளியே போங்கள்' என்று அநாகரீகமாக கூறியதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தனது பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அங்காளம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.