வேலூர்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா சின்னநெற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வடிவேலு (42). இவர் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு மற்றொரு ஓட்டுநர் அன்பழகனுடன் சென்றுள்ளார்.
அங்கு நெல் மூட்டைகளை இறக்கிவிட்டு அதற்கான பணத்துடன் வேலூர் நோக்கிவந்தனர். கொணவட்டம் அருகே லாரியை நிறுத்திய வடிவேலு தனது உரிமையாளரை போனில் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு காரில் வந்த மூன்று பேர் திடீரென இரும்புக் கம்பியால் வடிவேலுவைத் தாக்கியுள்ளனர்.
மிளகாய்ப் பொடி வீசிக் கொள்ளை
அவரின் சத்தம் கேட்டு லாரியில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகன் எழுந்துவந்து தடுக்க முயன்றபோது மூவரும் மிளகாய்ப் பொடியை எடுத்து இருவரின் முகத்திலும் வீசி அவர்கள் வைத்திருந்த இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயைப் பறித்துக் கொண்டு உடனடியாக தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து, வடிவேலுவும், அன்பழகனும் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.