வேலூர்:பாதாளச் சாக்கடைத் திட்டம் வேலூரில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்னும் நிறைவுபெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க ஆங்காங்கே இடைவெளி விடப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவறை கழிவுகள், கழிவு நீர் உள்ளிட்டவை மட்டுமே பாதாளச் சாக்கடையில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அண்மைக்காலமாக மாநகரப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முறையான பராமரிப்பின்றி மக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஒரு சில இடங்களில் பராமரிப்புப் பணிக்காக திறக்கப்படும் பாதாள சாக்கடையில் மூடிகள் சரிவர மூடப்படாமல், திறந்த நிலையில் விட்டுவிடுகின்றனர். இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சத்துவாச்சாரி டபுள்ரோடு உள்ளிட்ட சில இடங்களில் பாதாளச் சாக்கடையின் மூடி, சாலை மட்டத்துக்கு இல்லாமல் ஆங்காங்கே குழிகளாக காணப்படுகின்றன. மழைக்காலங்களில் அந்த குழிகள் மழைநீரில் மூழ்கியிருப்பதால் வாகனம் ஓட்டுவதற்கே அச்சமாக உள்ளதாகவும், குழிகளை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.